தஞ்சை மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் ஸ்கூட்டர் வாங்க பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெண்கள் தங்களது பணியிடங்களுக்கும், பிற வேலைகளுக்கும் எளிதில் செல்லும் வகையில் இந்திய நாட்டில் முதன்முறையாக அம்மா இருசக்கர வாகன திட்டத்தை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் ஸ்கூட்டர்கள் வாங்க 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்திற்கு மிகாமல் வருமானம் பெறுபவர்கள், ஓட்டுனர் உரிமம் உள்ள 18 வயது முதல் 45 வயது வரையிலான பெண்கள் இந்த திட்டத்தில் விதிகளுக்குட்பட்டு பயன்பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் பணி நிமித்தமாக தாங்கள் பணியாற்றும் இடங்களுக்கு அல்லது வங்கிகளுக்கு தினசரி நீண்ட தூரம் பயணிக்கக்கூடிய பெண்களுக்கு தேவையின் அடிப்படையில் ஸ்கூட்டர் வாங்கி கொள்ள அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் அல்லது வாகன விலையில் 50 சதவீதம் ஆகிய இவ்விரண்டில் எது குறைவானதோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள மூன்று சக்கரம் பொருத்திய வாகனம் வாங்கி கொள்ளலாம். இதற்காக ரூ.31 ஆயிரத்து 120 மானியம் வழங்கப்படும். தகுதியுள்ள பெண்கள் பயன்பெற உரிய விண்ணப்பங்களை அவரவர் பகுதிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாக பெற்று கொள்ளலாம்.
மேலும் thanjavur.tn.nic.in என்ற மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய இணைப்புகளுடன் விண்ணப்பத்தை தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பு அலுவகங்களிலேயே அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
பெறப்பட்ட விண்ணப்பங்கள் கிராம, நகர, மாநகர அளவிலான சரிபார்ப்புக்குழு மூலம் சரிபார்க்கப்பட்டு, மேலாய்வு செய்து மக்கள் தொகை விதிதாசார அடிப்படையில் தேர்வு செய்யப்படும். உரிய தகுதிகள் கொண்ட பெண்கள் விண்ணப்பித்து பயன் அடையலாம். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.