மன்னார்குடி ரயில் நிலையம் சரக்கு போக்குவரத்துக்கு திறக்கப்பட்டதை யொட்டி முதல் சரக்கு ரயில் மேற்கு வங்கத்தில் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு 33 வேகன்களில் புதிய சாக்கு பைகளை ஏற்றி வந்தது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து மன்னார்குடி வழியாக பட்டுக்கோட்டை வரை 55 கிமீ தூரத்திற்கு புதிய அகல ரயில் பாதை அமைக்க அப்போதைய ரயில்வே நிலைக்குழு தலைவராக இருந்த திமுக எம்பி டிஆர் பாலு எடுத்த தொடர் முயற்சியால் ரயில்வேதுறை அமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த 2010ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் இந்த திட்டத்தை அறிவித்தார்.
அதில் ஒரு பகுதியாக நீடாமங்கலத்தில் இருந்து மன்னார்குடி வரையிலான 14 கிமீ தூரத்திற்கு ரூ.79 கோடி செலவில் புதிய அகல ரயில் பாதை அமைக்க பட்டு அதில் கடந்த 2011 செப்டம்பர் மாதம் முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மன்னார்குடி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, திருப்பதி, ஜோத்பூர் ஊர்களுக்கு விரைவு ரயில்களும், மயிலாடுதுறை, மானாமதுரை, திருச்சி இடையே பயணிகள் ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. மன்னார்குடியில் ரயில் போக்குவரத்து தொடங்கி 9 வருடங்கள் ஆகியும் அதில் சரக்கு ரயில்கள் இயக்கப்படும் வசதிகள் இல்லாமல் இருந்து வந்தது. மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பல்லாயிரக்கணக்கான டன் நெல் மூட்டைகள் மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலத்திற்கு லாரிகள் மூலம் சாலை மார்க்கமாக எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து சரக்கு ரயில்கள் மூலம் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் அரிசி மற்றும் உரமூட்டைகள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகளும் மன்னார்குடியில் ரயில் நிலையம் இருந்தும் சாலை மார்க்கமாகவே வருகிறது. இதனால் பல்வேறு பிரச்சனைகளும், ரயில்வே நிர்வாகத்திற்கு கிடைக்க வேண்டிய வருவாய் இதுநாள் வரை கிடைக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், மன்னார்குடி தொகுதி திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜாவிடம் இதுகுறித்து பொதுமக்கள், வர்த்தகர்கள் தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வந்தனர். அதற்காக பல்வேறு முன் முயற்சிகளை திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா தொடர்ந்து எடுத்து வந்தார். அதன் பலனாக மன்னார்குடி ரயில் நிலையத்தில் சரக்கு போக்குவரத்தை துவக்க ரயில்வே நிர்வாகம் முடிவுசெய்து கடந்த 2018ம் ஆண்டு மன்னார்குடி ரயில் நிலையத்தில் அதற்கான பணிகள் துவக்கப்பட்டு தற்போது அப்பணிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
இந்நிலையில், மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல் மன்னார்குடி ரயில் நிலையத்திலிருந்து சரக்கு போக்குவரத்து துவங்க கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த நவம்பர் 10ம் தேதி மேற்கு வங்க மாநிலம் டிட்டாகர் ரயில் நிலையத்தில் இருந்து புதிய சாக்கு பண்டல்கள் 33 சரக்கு பெட்டிகளில் ஏற்றப்பட்டு மன்னார்குடி ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஆண்டுதோறும் டெல்டா மாவட்டங்களில் விளையும் நெல்களை கொள்முதல் செய்ய புதிய சாக்கு பைகளை வாங்குவது வழக்கம். நடப்பாண்டு, மன்னார்குடி ரயில் நிலையம் சரக்கு போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளதால் மேற்கு வங்கத்தில் இருந்து சாக்கு பைகள் நேரடியாக மன்னார்குடி ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து சாக்கு பைகள் இறக்கப்பட்டு லாரிகள் மூலம் திருவாரூர், குடவாசல், முத்துப்பேட்டை மற்றும் மன்னார்குடி அருகே உள்ள சுந்தரக்கோட்டை பகுதிகளில் உள்ள சரக்கு குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்படும். இந்த பணியில் 120 சுமை பணியாளர்களும், 175 லாரிகளும் ஈடுபடுத்தப்படும் என தெரிகிறது. மன்னார்குடி ரயில் நிலையத்தில் சரக்கு போக்குவரத்து துவங்கியதை அடுத்து வர்த்தகர்கள், சுமைப் பணியாளர்கள், லாரி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.