கஜா
புயல் வந்து கனவை சிதைத்தாலும் பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்ற சஹானா என்ற மாணவிக்கு நடிகர் சிவகார்த்திக்கேயன் செய்த உதவியினால் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வெற்றி பெற்று இந்த ஆண்டு மருத்துவம் படிக்கப் போகிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர்கள் கணேசன்- சித்ரா தம்பதி. கூலித் தொழிலாளியான இவர்களுடைய மகள் மாணவி சஹானா. கடந்த ஆண்டு ப்ளஸ் 2வில் 600 மதிப்பெண்ணுக்கு 524 மதிப்பெண் பெற்றார். இந்தச் செய்தியை ட்விட்டரில் செல்வம் என்பவர் வெளியிட்டார்.

மின்சாரமில்லாத, கஜா புயலில் விழுந்த குடிசை வீட்டில் வாழ்ந்து கொண்டு மன உறுதியோடு படித்து நடந்து முடிந்த ப்ளஸ் டூ தேர்வில் 600 க்கு 524 மதிப்பெண் பெற்றுள்ளார். #ஊக்கமது_கைவிடேல் என்று அரசுப்பள்ளி ஆசிரியர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்தப் பதிவைப் பார்த்த மூடர் கூடம் பட இயக்குநர் நவீன், "வாழ்த்துகள் சஹானா. இந்த 524 மதிப்பெண், நகரங்களில் பெரும்பள்ளிகளில் பெருந்தொகை கட்டி, ஸ்பெஷல் டியூஷன்கள் வைத்து, இரவு அம்மாவின் காம்ப்ளான் குடித்து படித்து பரிட்சை எழுதி எடுத்த பல 590களை விடவும் மேலானதே" என்று கூறினார்.


சிவகார்த்திக்கேயன் உதவி

இந்தப் பதிவை அடுத்த சில மணி நேரங்களில் ட்விட்டரில் பதிவிட்ட அரசுப்பள்ளி ஆசிரியர் செல்வம், நடிகர் சிவகார்த்திகேயன் மாணவிக்கு உதவ விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார். நன்றி நவீன் சார் கத்துக்குட்டி பட இயக்குநர் அண்ணன் சரவணன் மூலமாக சகோதரர் சிவகார்த்திகேயன் அவர்கள் மருத்துவபடிப்பு தொடர்பான முன்னெடுப்புகளை செய்வதாக உறுதி அளித்துள்ளார்கள் என்று கடந்த ஆண்டு பதிவிட்டார் ஆசிரியர் செல்வம்.

அரசுப் பள்ளியில் படித்து 12 ஆம் வகுப்பில் 524 மதிப்பெண் எடுத்த சஹானா, மேற்படிப்பு படிக்க வழியில்லாமல் வறுமையில் தவித்தார். இதனையறிந்த சிவகார்த்திகேயன் கடைசி வரைக்கும் போராடு உனக்கு நான் இருக்கிறேன் என ஊக்கம் அளித்து சஹானாவை நீட் பயிற்சி மையத்தில் சேர்த்தார்.


உதவிய மாவட்ட ஆட்சித்தலைவர்

அந்த மாணவி குறித்து சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தகவல் பரவியதையடுத்து அவரது குடிசை வீட்டிற்கு, அன்றைய தஞ்சாவூர் ஆட்சித்தலைவர் அண்ணாதுரை, சஹானாவின் வீட்டுக்கு சோலார் மூலம் மின் விளக்கு அமைத்துக் கொடுத்ததோடு, தன் சொந்தப் பணத்தில் பத்தாயிரத்தைக் கொடுத்து உதவினார்.

மாணவி சஹானா இந்த ஆண்டு 273 மதிப்பெண் பெற்று 120வது இடத்தை பிடித்த சஹானாவுக்கு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி இடம் கிடைத்துள்ளது.

நடிகர் சிவகார்த்திக்கேயன் தற்போது டாக்டர் படத்தில் நடித்து வருகிறார். ஏழை மாணவியின் மருத்துவ கனவை நனவாக்கியுள்ள சிவகார்த்திக்கேயனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.